தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று (வியாழக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு வயது 36.

இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர்.

சேதுராமன் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதிப்பதற்கு நடிகர் சந்தானம் பெரும் உதவியாக இருந்தார்.

லட்டு தின்ன ஆசையா படம் உட்பட வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் தனியாக கிளினிக் நடத்திவந்தார்.

இளம் வயதில் மருத்துவம் படித்த ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் அவரது மரணம் தொடர்பான இரங்கல் செய்தி குவிய ஆரம்பித்துள்ளன.

அவருடைய நெருங்கிய நண்பரான சந்தானம் ட்விட்டரில், என் உயிர் நண்பன் சேதுவின் மரணத்தால் தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பாதகவும், அவருடைய ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/iamsanthanam/status/1243262144767864834

நடிகர் சேதுராமனின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மாரடைப்பு காரணமாக நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமன் மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடைய குடும்பத்துக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/actorsathish/status/1243238169455271937

"அவருடைய மரண செய்தியால் அதிர்ச்சியில் இருக்கிறேன். சீக்கிரமாக சென்றுவிட்டார். மிகவும் நல்ல மனிதர்," என்று நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/aishu_dil/status/1243239173160493056

பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசனும், "கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. சேதுவின் மரணத்தை என்னால் நம்ப முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/sskarthik/status/1243241985789452288

பிரபல நடிகை குஷ்பு தன்னுடைய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீ எங்கள் இதயங்களை நொறுக்கிவிட்டு சென்றிருக்கிறாய் சேது. ஏன் இவ்வளவு சீக்கிரமாக சென்றாய்? பிறரை காட்டிலும் நல்ல உள்ளங்கள் ஏன் வேகமாக இந்த பூமியைவிட்டு செல்கின்றன? உன்னுடைய அமைதியான குணத்தையும் உன் அழகான சிரிப்பையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன். நீ திரும்பி வர மாட்டாயா என்று நினைக்கிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-NRywDADxp/

"36 வயதில் மாரடைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுளே இது நியாயம் அல்ல," என்று பிரபல திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/vp_offl/status/1243250195665575937

"உன்னுடைய மரணம் குறித்த செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா... உன்னுடன் நடித்த அவ்வளவு இனிமையான தருணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இதை எழுதும்போது மனது வலிக்கிறது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சேதுவின் காதலியாக நடித்த விஷாகா சிங்.

https://twitter.com/vishakhasingh55/status/1243253128234848257

பல திரைப்பட பிரபலங்களும் சேதுராமனின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

https://twitter.com/ganesh_vtv/status/1243244345383215105

2016ஆம் ஆண்டு நடிகர் சேதுராமனுக்கு தோல் சிகிச்சை நிபுணர் உமையாலுடன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: