அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இரு நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து அங்கு பலவித கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த தீர்ப்புக்கு முன்பு அயோத்தியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், களத்தில் வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய அயோத்திக்கு சென்ற பிபிசி குழு அங்கு இரண்டு நாட்கள் முகாமிட்டு பல்வேறு நிலைமைகளையும் ஆராய்ந்தது.

அந்த அனுபவத்தை விவரிக்கிறது இந்த கட்டுரை.

பிபிசி பயணம்

அயோத்தி தீர்ப்பு நவம்பர் 9-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என்ற அறிவிப்பை உச்ச நீதிமன்றம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 8-ஆம் தேதி இரவு 9.30 மணிக்குதான் வெளியிட்டது. அதையடுத்த ஒரு மணி நேரத்தில் டெல்லியில் உள்ள பிபிசி இந்திய தலைமையகத்தில் உள்ள பிபிசி தமிழ் சேவை குழு, சாலை மார்க்கமாக அயோத்தி நோக்கி புறப்பட்டது.

தீர்ப்புக்கு பின்னர் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்ற கவனத்துடன் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், டெல்லியில் இருந்து லக்னெள செல்லும்வரை, அதாவது 590 கி.மீ தூரத்துக்கு சாலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

பல்வேறு மாவட்ட எல்லையில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் ரோந்து வாகனங்கள் இயங்கியதை பிபிசி குழு பார்வையிட்டது.

குறைவான பாதுகாப்பு

நவம்பர் 9-ஆம் தேதி காலை 8 மணியளவில் பிபிசி குழு லக்னெளவை அடைந்த பிறகுதான் அயோத்தியா தீர்ப்பை ஒட்டிய காவல் ஏற்பாடுகள் மாவட்ட எல்லைகளில் தீவிரமாகின. அதுவும் அயோத்தியாவுக்கு 30 கி.மீ முன்னால் உள்ள பகுதியில் முதலாவது தடுப்பு, இந்த தீர்ப்புக்காக போடப்பட்டதை பிபிசி அறிந்தது.

பிபிசி குழு அயோத்தியாவை அடைந்த வேளையில், அங்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டதாக நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. அயோத்தியில் ஹனுமன் மூர்த்தி என்ற சாலை சந்திப்பில் உள்ள சிலை அமைந்த பகுதிதான், அயோத்தியில் ராம் ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் பகுதிக்கான ஒரே வழி.

அங்கு காவல்துறையினர் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தார்கள். உள்ளூர் வாகனங்களில் செல்வோர் உட்பட எவரும் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊடகங்களை சேர்ந்தவர்கள், அந்த சோதனைச் சாவடிக்கு முன்பாக நின்றவாறு தங்களுடைய செய்திகளை வழங்கி கொண்டிருந்தார்கள்.

அயோத்திக்கு செல்லும் யாத்ரீகர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் அந்த சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரமுள்ள பகுதியை அடைந்தால், அங்கு ஆலயத்துக்குள் செல்வதற்கான மற்றொரு சோதனைச் சாவடி இருக்கும்.

அதில் கோயிலைப் பார்வையிட வருவோர், உள்ளூர்வாசியென்றால் ரேஷன் அட்டை அல்லது ஆதார் அட்டை இருக்கிறதா என்று காவல்துறையினர் கேட்கிறார்கள்.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

குறிப்பாக, அங்கு வருபவர்கள், ஊடகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தால், அவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை என்றும் பக்தர்களாக எவ்வித ஊடக ஒளிபரப்பு கருவிகள் அல்லது புகைப்பட சாதனங்களின்றி செல்லலாம் என்று காவல்துறையினர் கூறினார்கள்.

இதையடுத்து, அயோத்தியில் ராம் ஜென்ம பூமி அமைந்த பகுதிக்குள் செல்லாமல் அதன் வெளிப்பகுதியில் உள்ள கடை வீதியில் உள்ளவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோரிடம் பிபிசி குழு பேசியது.

அங்கு ஒரு சில கடைகள் மூடப்பட்டிருந்தன. அவற்றின் உரிமையாளர்கள் முஸ்லிம்கள் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே அந்த கடைகள் மூடப்பட்டதாக நம்மிடம் தெரிவிக்கப்பட்டது.

அயோத்தியிலேயே பிறந்து ஆன்மிகத்துக்கு மாறிய மகாராஜ் என்பவர், "உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவன் நான். பிரச்சனைக்குரிய நில விவகாரத்தால் இந்து, முஸ்லிம் சமூத்தினர் இடையே பகைமைதான் வளர்ந்தது. தற்போது, நிலத்துக்கான உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்து விட்டதால், அனைவரும் அதை மதித்து நடப்பார்கள்" என்று தெரிவித்தார்.

அவரது ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்ட ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் ஆர்வலர் ஒருவரும், தீர்ப்பு வந்தபோது தான் சந்தித்த அனுபவத்தை பிபிசி குழுவிடம் பகிர்ந்து கொண்டார்.

வழக்கம் போலவே நான் காலை 8.30 மணியளவில் ராம் ஜென்ம பூமி பகுதிக்கு வழிபட சென்றேன். சுமார் 10.30 மணியளவில் நான் ராமர் விக்கிரகம் அமைந்த பகுதியை அடைந்தபோது, திடீரென அங்கு கூடியிருந்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டார்கள் என்று அந்த ஹங்கேரி பெண்மணி தெரிவித்தார்.

அப்போதுதான் கூடியிருந்தவர்களிடம் என்ன நடக்கிறது என்று கேட்டதாகவும், அவர்கள் அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாகவும் பக்தர்கள் முழக்கமிடுகிறார்கள் என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக அந்த ஹங்கேரி ஆன்மிக ஆர்வலர் கூறினார்.

வழக்கு தொடர்ந்தவர் கவலை

இதன் பிறகு, அயோத்தி வழக்கில் முக்கிய வழக்காடுநர்களில் ஒருவரான ஹாஷிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரியை பிபிசி குழு சந்தித்தது. தீர்ப்பு குறித்த வரவேற்பை அவர் வெளிப்படுத்தினாலும், அவரது முகத்தில் நீடித்த கவலை இருந்தது

அதுகுறித்து நாம் கேட்டபோது, "இந்தியாவில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புதான் இறுதியானது. ஆனால், எங்கள் வழக்கில் மிகுந்த நம்பிக்கையுடன் வழக்கு தொடர்ந்தோம். அதில் எல்லா அம்சங்களையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு தீர்ப்பு அளித்துள்ளது" என்று கூறினார்.

அந்த தீர்ப்பை அனைவரும் ஏற்கத்தான் வேண்டும் என்று கூறிய அவர், தீர்ப்பின்படி அரசு எங்கு இடம் ஒதுக்கப்போகிறது, எப்படி ஒதுக்கப்போகிறது என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=QmBxJJZsYWw

ராம ஜென்ம பூமியில் பிபிசி குழு

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் அயோத்திக்குள் ஒரு யாத்ரீகர் போல பிபிசி குழு செல்ல முற்பட்டது.

முதல் சோதனைச் சாவடியில் அடையாள அட்டைகள் சரிபார்ப்புக்குப் பிறகு ஆலயத்தின் முதலாவது சோதனை மையத்துக்குள் நுழையும் முன்பாக, செல்லிடப்பேசிகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட உடைமைகளை ஒப்படைக்குமாறு யாத்ரீகர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்.

அதன்படி உடன்பட்டு விட்டு முதலாவது சோதனைச்சாவடியை கடந்து சுமார் இருநூறு மீட்டர் தூரம் நடந்து சென்றால் இரண்டாவது சோதனை பகுதி. அங்குள்ள மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், ஆண், பெண் வரிசைகளை பிரித்து அனைவரையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தினார்கள்.

ஆடையின் அனைத்து பகுதிகள், முழுமையாக தடவப்பட்டு, ஏதேனும் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். பிறகு, இரண்டு முதல் மூன்று அடி அகலம் வரை அமைக்கப்பட்ட மேற்புறமும், இருபுறமும் கம்பிகளால் அமைக்கப்பட்ட தடுப்புகள் கொண்ட பகுதிக்குள் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பத்து அடி கடந்த உடனேயே மீண்டும் ஒரு சோதனை மையம். அங்கு ஆடவர்கள் என்றால் அவர்களின் சட்டை பாக்கெட்டுகள், பேன்ட் பாக்கெட்டுகள், பெல்ட்டுகள், காலணி மற்றும் காலுறைகளை தேவைப்பட்டால் கழற்றச் செய்து சோதனையிடுகிறார்கள்.

பெண்கள் என்றால் அவர்களின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் பகுதியிலும் இழுத்துப் பார்த்து சோதனை நடத்தப்பட்டதாக நம்மிடம் யாத்ரீகர்கள் தெரிவித்தார்கள். இதை அடுத்து, மெதுவாக நகர்ந்து ஊர்ந்து செல்லும் கூட்டம், ராம் ஜென்ம பகுதியை அடைவதற்கு முன்பாக மீண்டும் ஒரு சோதனை பகுதியில் யாத்ரீகர்களை சோதனையிடப்படுகிறார்கள்.

அதைக் கடந்த பிறகே ராம ஜென்மபூமி பகுதியில் இருந்து இருபது அடி தூரத்தில் இருந்தபடி வழிபட யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த பகுதியில் ராணுவத்தினர் கூடாரம் அமைக்கப் பயன்படும் கனமான மேற்கூரை கூடாரங்களால் மூடப்பட்டுள்ளன. அதன் நாற்புறமும் தானியங்கி துப்பாக்கிகளை ஏந்தியவாறு மத்திய ரிசர்வ் காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள். சுமார் 50 வீரர்கள் வரை அங்கு சுற்றிலும் இருக்கிறார்கள்.

அநத் பகுதியைச் சுற்றிய திறந்தவெளி பகுதியில் கண்காணிப்பு கோபரங்களில் மத்திய படையினர் கண்காணிக்கிறார்கள்.

அங்கு தங்கத்தில் செய்யப்பட்ட ராமர், லட்சுமணன், சீதையின் சிறிய விக்கிரகம் உள்ளது. சில நொடிகள் அங்கு நின்று பார்க்க அனுமதிக்கும் படையினர், யாத்ரீகர்கள் வெளியேற அவசரப்படுத்துகிறார்கள். காலணிகள் அணிந்தவாறு எல்லா பகுதிகளுக்கும் யாத்ரீகர்கள் சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

ராம் ஜென்ம பூமியை பார்த்த பிறகு வெளியேறும் பக்தர்கள், யாத்ரீகர்களின் செயல்பாடும் இங்கு கண்காணிக்கப்படுகிறது. வரும் வழியில் சந்தேகமாக யாராவது தோன்றினால், அவர்களும் தனியாக அழைத்து விசாரிக்கப்படுகிறார்கள்.

பிபிசி குழுவைச் சேர்ந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர், முந்தைய நாள் செய்தி சேகரிப்பின்போது ராம் ஜென்ம பூமி நுழைவுப்பகுதிக்கு வெளியே இருந்ததை பார்த்த ஒரு காவல் ஆய்வாளர், மறுதினம் வெளிப்புற வாயில் பகுதியில் பாதுகாப்புக்காக நின்றிருந்தார்.

நமது குழுவை பார்த்த அவர், உடனடியாக அவர்களை அழைத்து, உங்களை யார் உள்ளே அனுமதித்தது, உங்களுடைய அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கேட்டார். பிபிசி குழுவிடம் எவ்வித ஒளிப்பதிவு மற்றும் ஒளிபரப்புக் கருவிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியவுடன் இங்கு பார்த்ததை உங்கள் ஊடகத்தில் வெளியிடுவீர்களா என்று அந்த ஆய்வாளர் கேட்டார்.

நிச்சயமாக இதை வெளியிடுவோம் என்று கூறியவாறு அங்கிருந்து நகர்ந்தோம்.

பின்னர், அதன் அருகே உள்ள சரயு நதிப்பகுதிக்கு சென்றோம். இந்த நதியில் நீராடுவதை, அயோத்திக்கு வரும் யாத்ரீகர்கள் புனித வாய்ப்பாக நம்புகிறார்கள்.

அங்கிருந்து ராம்ஜென்மபூமிக்கு பிந்தைய பகுதியில் முன்பு முஸ்லிம்கள் ஏராளமாக வாழ்ந்ததாக கூறப்பட்ட பகுதியை பிபிசி குழு பார்வையிட முற்பட்டபோது, அங்கு தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும் காலப்போக்கில் அங்கு வாழ்ந்த பலரும் ஃபைஸாபாத் பகுதிக்கு இடம் மாறி விட்டதாகவும், சிலர் ராம்ஜென்மபூமிக்கு பின்னால் அமைத்த கடைவீதி கூட தற்போது கிடையாது என்றும் நம்மிடம் தெரிவிக்கப்பட்டது.

பலத்த கண்காணிப்பு, கடுமையான பாதுகாப்பு என்று இங்கு உள்ளூர்வாசிகள் அன்றாடம் காவல்துறையினரின் வளையத்திலேயே இருப்பதை பிபிசி குழு அதன் இரு நாள் பயணத்தில் உறுதிப்படுத்தியது.

https://www.youtube.com/watch?v=jDPmuhRJQq0

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :