கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து கார் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்பெயினில் இயங்கும் தீவிர வலதுசாரி கட்சியான வாக்ஸ் கட்சி நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கார் ஓட்டிப் போராட்டத்தில் ஈடுபடும்படி தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. போராட்டத்தின்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் யாரும் காரை விட்டு இறங்கவேண்டாம் என்றும் அது கூறியிருந்தது.

தலைநகர் மேட்ரிட்டில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் கார்களில் ஸ்பெயின் கொடியை அசைத்தபடி சென்றனர். சோஷியலிஸ்ட் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பதவி விலகவேண்டும் என்று அவர்கள் கோரினர்.

மிகக் கடுமையாக முடக்க நிலை அறிவித்த நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. மார்ச் 14ம் தேதி முதல் அங்கு முடக்க நிலை அமலில் உள்ளது. கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் முடக்க நிலை தளர்த்தப்பட்டிருந்தாலும் தலைநகர் மேட்ரிட் மற்றும் பார்சிலோனா நகரங்களில் இன்னும் கடுமையான முடக்க நிலை அமலில் உள்ளது. ஏனெனில் அந்த நகரங்களில்தான் கொரோனா தொற்று கடுமையாக இருந்தது. அந்த நகரங்களிலும் திங்கள்கிழமை முதல் முடக்க நிலை தளர்த்தப்பட்டு 10 பேர் வரை வெளியில் கூடவும், வெளியிடங்களில் சாப்பிடவும் அனுமதி அளிக்கப்படவுள்ளது.

ஆனால், தீவிர வலதுசாரி கார் போராட்டக்காரர்கள் கோருவது என்ன தெரியுமா? முடக்க நிலையால் பொருளாதாரம் பாதிக்கிறது என்று கூறும் அவர்கள், முற்றாக முடக்க நிலையை நீக்கிவிடவேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை.

பாகிஸ்தான் விமான விபத்து: உயிர் பிழைத்தவரின் அனுபவம்

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்தவர், தன்னால் "கரும்புகையை மட்டுமே சுற்றிலும் பார்க்க முடிந்தது" என்று கூறினார்.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் கராச்சியில் தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னர் விபத்துகுள்ளானதுபோது அதிலிருந்து உயிர்பிழைத்த இருவரில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது சுபேரும் ஒருவர்.

சிந்து மாகாணத்தை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விரிவாக படிக்க: பாகிஸ்தான் விமான விபத்து: உயிர் பிழைத்தவர் கூறுவது என்ன?

கொரோனா வைரஸ்: உலக தலைவர்கள் தங்களை எவ்வாறு மாற்றிக் கொண்டனர்?

பெருந்தொற்று உலகம் முழுவதும் பலரின் அன்றாட வாழ்க்கையிலும் பணியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பல விஷயங்களை உலக நாடுகள் அனைத்தும் கடைப்பிடித்து வருகின்றன.

இந்த புதிய நடைமுறைகளுக்கு உலகத் தலைவர்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு உலகத் தலைவர்கள் தங்களது அன்றாட பணியில் இந்த கொரோனா சூழலில் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டனர்?

விரிவாக படிக்க: வணக்கம் முதல் தேநீர் வரை: கொரோனா வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன?

கொரோனாவால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100ஐ கடந்தது

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் சிகிச்சை எடுத்துவந்த ஐந்து நபர்கள் இறந்துள்ளனர்.

புதிதாக கொரோனா தாக்கத்திற்கு ஆளானதாகக் கண்டறியப்பட்ட 759 நபர்களுடன் சேர்த்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,152ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிப்புக்கு உள்ளான 759 நபர்களில் 49 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100ஐ கடந்தது - விரிவான தகவல்கள்

குஜராத் வென்டிலட்டர் சர்ச்சை - ஆளும் பாஜக மீது குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்ற சில மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. இத்தொற்று அம்மாநிலம் கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், தமன் 1 வென்டிலேட்டர் விவகாரம் அங்கு மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகள் பலருக்கும் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதால், போதுமான வென்டிலேட்டர் கருவிகளை மருத்துவமனைகள் வைத்திருப்பது அவசியமாகிறது.கொரோனா தொற்று தொடங்கிய உடனே, இதற்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல நாடுகளும் வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்கத் தொடங்கின.

ஆனால், குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கருவிகள் உயிர்களை காக்கும் என்ற எதிர்பார்பபை பூர்த்தி செய்யவில்லை. இதுதான் இந்த ஒட்டுமொத்த சர்ச்சையின் ஆரம்பப்புள்ளியாக இருந்தது.

விரிவாக படிக்க: குஜராத் சர்ச்சை: வென்டிலேட்டர் பயன்படுத்துவதால் நோயாளிகளின் ரத்தக்குழாய்கள் சிதைகிறதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: